பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 26, 2015

ஆர்.கே. லட்சுமண் - அஞ்சலிஅஞ்சலி

Read More...

:-):-)

Read More...

Sunday, January 18, 2015

முக்கியமில்லாத அறிவிப்பு

துக்ளக் ஆண்டு விழா செல்லவதற்கு முன்னால் ‘ஐ’ படம் பார்த்தேன். இரண்டைப்பற்றி சுட சுட எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன் அப்போது தான் எழுத்தாளர்களுக்கு நேர்ந்த சோதனையை பற்றி ஒருவர் எனக்கு சொன்னார். மனம் நொந்து போய்விட்டேன்.
அடுத்த வாரம் எழுதுகிறேன்.

முருகனும் பெருமாளும் என்னை காக்க வேண்டும். பெருமாளும் முருகனும் என்று எழுதனால் நமக்கு எதற்கு வீண் வம்பு !

Read More...

Monday, January 12, 2015

சென்னை புத்தக கண்காட்சி - 2015 - ஸ்ரீராம்

இந்த முறை ஒய்எம்சீஏ மைதானத்தில் - ரோட்டை கடந்து உள்ளே செல்வதே ஒரு பெரிய வைகோ நடை பயணம். மொத்தம் எழுநூறு ஸ்டால்கள், இந்த முறை இடம் இல்லததால் 200 பதிப்பகங்களுக்கு இடம் இல்லை. இரண்டாம் நாள் என்பதால் ஆங்கங்கே வயர்கள் தொங்கி, நம்மையும் தொங்கலில் விட்டன. எப்பொழுதும் போல் "ஸ்டால் 203க்கு எலக்ட்ரிசியன் அனுப்பவும்", "ஆதம்பாக்கத்தை சேர்ந்த குமாரசாமி எங்கிருந்தாலும் வரவும், உங்களது பத்து வயது மகன் மாதவ் உங்களை பிரிந்து தவித்து கொண்டிருக்கிறார்" போன்ற அறிவிப்புகளுக்கு குறைவே இல்லை. தாங்க முடியாதது அந்த ஆச்சி மசாலா விளம்பரங்கள். பந்தல் அமைப்பு, பார்கிங், தண்ணீர், உணவகங்கள் அனைத்தும் நிறைவாக இருந்தன. ஏன் இன்னும் கழிப்பறைகள் அப்படியே உள்ளன? நுழைவு சீட்டு கொடுப்பதற்கு ஒரு வரிசை தான் வைக்க வேண்டுமா என்ன?

பிரபலங்களின் கூட்டத்திற்கும் குறைவே இல்லை - சாரு ஜீன்ஸ் பாண்டில் வந்திருந்தார், பத்ரி அந்த பாக் பாக்கில், மற்றும் மனுஷ தன் வழக்கமான ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார் - எங்கே இங்கயும் ஒரு பார்பன யுத்தம் நடக்குமோ என்று தோன்றியது - நல்ல வேலை பிழைத்தேன். முக்தா ஸ்ரீநிவாசன் குழந்தைகளுக்கு நல்ல செய்திகளை சொல்லி கொண்டிருந்தார். வெளியே மேடையில் கார்ல் மார்க்ஸ் பிராஹ்மி, தமிழ் விஷயங்களை அலசி கொண்டிருந்தார் - அங்கே துணி போர்த்திய வெள்ளை நாற்காலிகளை தவிர்த்து ஏனையவை நிரம்பியிருந்தது ஆச்சரியம்!

குமுதம், விகடன், தினமலர், ஹிந்து, நக்கீரன் போன்ற பத்திரிகைகள், விடாமல் பிரசுரம் நடத்தி புத்தக விழாவிற்கு வருவது பாராட்டத்தக்கது. விகடன், உயிர்மை,கிழக்கு, காலச்சுவடு ஸ்டால்களில் நல்ல கூட்டம் - இந்த வரிசையில் நல்ல வியாபாரம் பார்த்தது இன்போர்மேஷன் மினிஸ்ட்ரியின் புத்தகங்கள். சாஹித்ய அகடமியின் புத்தங்கங்கள் அதி மலிவு கிடைத்தன. மணிமேகலை, வானதி, அல்லையன்ஸ், கிரி டிரடிங்க் போன்றவை வழக்கமான கூட்டங்களை கொண்டிருந்தன. பெரியார், அம்பேத்கர், ஹிந்து, முஸ்லிம் இலக்கிய கடைகளில் நல்ல காற்று கிடைத்தது. எப்பொழுதும் போல் இந்த வருடமும் கல்கியே ஜெயிக்கிறார் - பொன்னியின் செல்வன் தான் நாயகன் என்று சொல்ல தேவையே இல்லை.

சில வருடங்களை நான் பார்த்த வரையில் அதிகமாக விற்பனையாவது குழந்தைகள் புத்தகங்கள் தான். முகநூல், வாட்ஸ் ஆப் காலத்தில் இன்னும் ஓலை சுவடி காலத்தில இருப்பது போல தோன்றுவது தவிர்க்க முடியவில்லை. இ புக் வடிவத்தில் இன்னும் ஏன் முன்னேறவில்லை? கண்காட்சி வலைதளத்தின் மூலம் பத்து நாட்களுக்கு குரியரில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளனர் - அப்படியே அமேசான்,ப்ளிப்கார்டிலும் விற்பனை செய்யுங்கள. நிச்சியமாக புது யுகம் தான்.


திரும்பும் பொழுது நம்ம ஆட்டோ கிடைத்ததில் பிறவி பலன் அடைந்தேன். நன்றி.

படங்கள்:
- Sriram Sundaresan

சரக்கு மாஸ்டர் பற்றி எழுதாதது மிகுந்த வருத்ததை தருகிறது. அடுத்த புத்தக கண்காட்சி பதிவு யாருடையது ?

Read More...

Friday, January 09, 2015

வாழ்த்துகள் தலைவரே


( படம் எடுத்த வருடம்: 2015, நிகழ்ச்சி: திமுக தலைவராக கருணாநிதி தேர்வு )


( படம் எடுத்த வருடம்: 2008, நிகழ்ச்சி: திமுக தலைவராக கருணாநிதி தேர்வு )
இரண்டு படங்களுக்கும் ஒரு வித்தியாசம்: 2015 - மாலையை பிடிக்க ஒரு ஆள். 2008 அது கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

Read More...

Monday, December 29, 2014

ஸ்ரீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ், முரணான இரட்டைப்பதவி தரும் ஆதாயம் - எ.அ.பாலா


>பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசன் மீது தற்போது சுமத்தப்பட்டிருக்கும், மிக முக்கியமான ”இரட்டைப்பதவி” தரும் ஆதாயத்துக்கான குற்றச்சாட்டின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஜனவரி 2008-ல், ஸ்ரீனிவாசன் தலைமை வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தபோது, அப்போது அவர் பிசிசிஐ பொருளாளராக இருந்த காரணத்தால், இப்பிரச்சினை அப்போதே தலைதூக்கியது. பிசிசிஐ நிர்வாகத்தில் இருந்தவர்கள், பிரச்சினையை முறையாக எதிர்கொண்டு தீர்வெடுக்காமல், முரணான இரட்டைப்பதவி குறித்த 6.2.4 சட்டத்தை தங்களுக்கு வசதியாக (ஐபில், சேம்பியன் லீக் இதர டி-20 போட்டிகளுக்கு 6.2.4-ல் விலக்கு அளித்து) செப்-2008-ல் திருத்தி அமைத்தனர். இது இப்போது கடுமையான கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.2010-ல் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஏசி முத்தையா இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், அதை விசாரித்த 2 நீதியரசர்களில் ஒருவர் சாதகமாகவும், மற்றவர் பாதகமாகவும் தீர்ப்பளித்ததாலேயே, ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவராக செப் 2011-ல் பொறுப்பேற்க முடிந்தது. ஒரு வகையில் அரசியல், கார்ப்பரேட் பதவி வகிப்பவர்கள், கிரிக்கெட் வீரர்கள் (கவாஸ்கர், கங்குலி, ரவி சாஸ்திரி, கும்ப்ளே, ஸ்ரீகாந்த்) பிசிசிஐ, ஐபிஎல் சார் பதவிகளில் இருப்பதும் முரணானதே! தற்போது உச்ச நீதிமன்ற ஆணையின் பேரில் பிசிசிஐ அளித்த (முரணான) இரட்டைப்பதவி வகிப்பவரின் பட்டியலில் மேலே குறிப்பிட்ட பெயர்கள் இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படியிருப்பினும், பிசிசிஐ தலைவர் என்ற முறையில், ஸ்ரீனிவாசனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். Caesar's wife must be above suspicion!

தனது முரணான இரட்டைப்பதவி போதாதென்று, ஸ்ரீனிவாசன் தனது மருமகனையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் CEO (குருநாத் அணி ஆர்வலர் என்பதை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது!) ஆக்கியதையும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனியை இந்தியா சிமெண்ட்ஸின் துணைத்தலைவராக ஆக்கியதையும் நீதிமன்றம் தவறான விஷயங்களாகக் கருதியதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஐபிஎல் சூதாட்டம் மற்றும் அதற்கு பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக, வலிமை மிக்க பிசிசிஐ மற்றும் ஸ்ரீனிவாசன் மீது வழக்கு தொடர்ந்த, பீகார் கிரிக்கெட் அசோசியேஷன் செயலர் ஆதித்ய வர்மா, ஒரு விதத்தில் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு பின்னணியில் உதவி வரும் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியே ஊழல் மற்றும் FERA மீறல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இந்தியாவை விட்டு ஓடியவர் என்பது சற்று நெருடலாக இருப்பினும்!

இந்த சூதாட்டத்தை விசாரிக்க, 2013-ல் பிசிசிஐ, ஜெயராம் சௌவ்டா மற்றும் பாலசுப்ரமணியம் ஆகிய 2 முன்னாள் நீதிபதிகள் கொண்ட ஒரு விசாரணைகுழுவை அமைத்தது. அக்குழு மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா இருவர் குற்றங்களுக்கு எதிராக ஆதாரங்கள் சரிவர இல்லாததால் அவர்கள் குற்றமற்றவரகள் என்று கூறிவிட்டது. குருநாத் செய்தது குறித்து ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதை ஏற்றுக் கொண்டாலும், அந்த விசாரணைக் குழுவையும், அதில் இடம் பெற்றவர்களையும் பரிந்துரைத்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

இந்தியாவின் மிகப்பிரபலமான விளையாட்டான கிரிக்கெட் மீதுள்ள உச்சநீதிமன்றத்தின் அக்கறை, பிசிசிஐ நிர்வாகம் சீர்படுத்தப்படவேண்டியதன் அவசியம், நீதியரசர்களின் கேள்விகளிலும், விமர்சனங்களிலும் தெளிவாகத் தெரிகிறது. மே 2013-ல் சில ராஜஸ்தான் அணி வீரர்கள், விண்டு தாராசிங் மற்றும் ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், சூதாட்டக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட சமயத்திலிருந்து இன்று வரை பிசிசிஐ உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும், கிரிக்கெட் ஆட்டமே “போலி” என்ற கருத்து வலுப்பட்டு விட்டால், அது கிரிக்கெட் விளையாட்டுக்கு பெருங்கேடாக அமைந்து விடும் என்பதையும் உச்சநீதிமன்றம் கடுமையாக சுட்டிக் காட்டி உள்ளது.

நிற்க! பிசிசிஐ கண்டுகொள்ளாத நெருடலான / தவறான விஷயங்கள் நீதிமன்றத்தின், மீடியா வாயிலாக கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களின் பார்வைக்கு வந்திருப்பது நல்லது தான். இதனால், பிசிசிஐ நிர்வாகத்தில் நேர்மையும், திறமையும், கிரிக்கெட் மீது அக்கறையும் கொண்டவர்கள் நுழைய வழி ஏற்படுமாயின், அது வரவேற்கத் தக்கதே. ஆனால் ஸ்ரீனிவாசனையும் இன்னும் சிலரையும் பிசிசிஐ நிர்வாகத்திலிருந்து விலக்கி வைத்தால் அது நிறைவேறி விடும் என்று எண்ணுவது தவறு. அதோடு, பெரிய அளவில் அரசியல், கார்ப்பரேட் பலம் கொண்ட பிசிசிஐ நிர்வாகத்துக்கு எதிராக கிரிக்கெட் வீரர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று சிலர் வாதிடுவதிலும் பொருள் இல்லை.

கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட சச்சின் டெண்டுல்கரே பெரிய அளவில் எதற்கும் கருத்து எதுவும் சொன்னது கிடையாது என்பது தான் யதார்த்தம். நிர்வாகத் திறமை வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் இந்தியாவில் இல்லாமல் இல்லை. அது போல, மற்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டாத அரசியல்வாதிகள் பிசிசிஐ நிர்வாகத்தில் பங்கு கொள்ள அதிக ஆவலாக இருப்பது ஏன் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். முதலில், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து, பதிவு செய்யப்பட்ட, அவர்களுக்கான கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும். பிசிசிஐ-யுடன் இணைந்து அக்கழகம் செயல்படுவது ஆரோக்கியமான நிர்வாகச் சூழலுக்கு வித்திடும் என்று நம்பலாம்.

இந்தியாவுக்கு விளையாட முடியாத, திறமை மிக்க, பல கிரிக்கெட் வீரர்களின் வருவாய்க்கு ஐபிஎல் வழி ஏற்படுத்தியிருப்பதை மறுக்க இயலாது. ஹாக்கி, பூப்பந்து, கால்பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுகளும் ஐபிஎல் காட்டிய வழியைத் தொடர்ந்ததால் அவற்றிலும் மக்களுக்கு தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆக, ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளை ஐபிஎல் போட்டியில் இருந்து தூக்கி எறிவது, பெரும்பான்மையான கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் தண்டிப்பதே அன்றி சரியான தீர்வாகாது. ஸ்ரீனிவாசன் மீண்டும் பிசிசிஐ தலைவருக்கான தேர்தலில் நிற்க முடியாத சூழல் நிலவினால், தேர்தலுக்குப் பின் புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பிசிசிஐ நிர்வாகம், அவ்வணிகள் பிசிசிஐ தொடர்பு இல்லாத தனிநபர்கள்/கம்பெனிகளிடம் விற்கப்படுவதற்கு ஆவன செய்வதே முறையான தீர்வாக அமையும்.

மேலும், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய, குறிப்பிட்ட ஒரு சென்னை அணி கிரிக்கெட் வீரர் மீது, ஸ்ரீனிவாசன் தலைமையிலான பிசிசிஐ, நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று முத்கல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதும் ஸ்ரீனிவாசன் மீண்டும் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்பதற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்தியா சிமெண்ட்ஸ் பெரிய அளவில் (2008-ல் 400 கோடி) பண முதலீடு செய்திருப்பதும், ஐபிஎல் போட்டியில் திறமை வாய்ந்த அவ்வணி பங்கு கொள்வது அவசியம் என்பதும் ஒருபுறமிருக்கட்டும். பிசிசிஐ-யின் விதிமுறைகள் “புனிதத்தன்மை” கொண்டவை அல்ல என்றும், ஐபிஎல் போட்டியிலிருந்து ஒரு அணி விலக்கப்படுவதால், கிரிக்கெட் வீழ்ந்து விடாது என்றும் உச்ச நீதிமன்ற விமர்சனத்தை நோக்கும்போது ஸ்ரீனிவாசன் பிசிசிஐ தலைவர் பதவிக்கான (ஜனவரி 2015ல் நடக்கவிருக்கும்) தேர்தலில் போட்டியிடுவது கடினம் என்று தான் தோன்றுகிறது.

இறுதியாக, இந்த முரணான இரட்டைப்பதவியால் ஆதாயம் என்ற சமாச்சாரம் 6 வருடங்களாகவே தொடர்ந்திருக்கிறது. மொத்த பிசிசிஐ நிர்வாகமும் அதற்குத் துணை போயிருக்கிறது. ஆக, ஸ்ரீனிவாசன் மட்டுமே தார்மீக அடிப்படையில் நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறுவது வடிவேலு காமடிக்கு இணையானது. அது போல, இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து ஸ்ரீனிவாசன் அவர்களை நிரந்தரமாக ஒதுக்கி வைப்பதும் அத்தனை எளிதில்லை என்றும் தோன்றுகிறது.

---எ.அ.பாலா
சச்சினை காட்டிலும் திறமையான பேட்ஸ்மென் யார் என்றால் அவர் ஸ்ரீனிவாசன் என்று தான் சொல்ல வேண்டும், இவ்வளவு நடந்தும் அவுட்டாகாமல் இருக்கிறார் !

Read More...

Tuesday, December 23, 2014

கே.பாலசந்தர் - ஓர் அஞ்சலி
இயக்குனர் சிகரம் என திரையுலக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு.கே.பாலசந்தர் இன்று (23.12.2014) மாலை 7.05க்கு காலமானார். அவருக்கு வயது 84.

டெல்லி கணேஷ், நாகேஷ் போன்ற நடிகர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களின் அதிகபட்ச திறமையை வெளிக்கொனர்ந்ததில் பாலச்சந்தருக்கு மிகப்பெரிய பங்குண்டு.

நாகேஷைப்பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியாது, பாலசந்தர் அவர்கள் நாகேஷைப்பற்றி பேசும்போதெல்லாம் எரிச்சலாய் இருக்கும். ஆனால், நாகேஷ் போல என் பெயரையும் அவர் சொல்லுமளவு நான் நடிக்க வேண்டும் என நினைத்ததாக கமலஹாசன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். திறமை எங்கிருந்தாலும் அதை பாராட்டும் குணத்துக்கு சொந்தக்காரர்.

படங்கள் இயக்காமல் இருந்த காலத்தில்கூட தமிழில் வந்த நல்ல படங்களுக்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளியும் அனுப்பி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தவர். கவிதாலயா லெட்டர் ஹெட்டில் பாலச்சந்தர் கையெழுத்துடன் வந்த பாராட்டுக்கடிதத்தை சினிமா போஸ்டர்களில் விளம்பரமாக பயன்படுத்திக்கொள்ளும் அளவு அவரது வார்த்தைகளுக்கு மதிப்பிருந்தது. இயக்குணர்களும் பாலச்சந்தரின் பாராட்டு கிடைப்பதை பெருமையாக கொண்டார்கள்.

சக இயக்குணர்கள் எடுத்த படங்களையும் நன்றாக இருந்தால் வாயார பாராட்ட தயங்கியதில்லை.

அகர முதல எழுத்தெல்லாம் என்ற குறளையும், திருவள்ளுவரையும் தனக்து கவிதாலயா என்ற தனது சொந்த படக்கம்பெனிக்கு லோகோவாக வைத்தவர்.

1965ல் நீர்க்குமிழி படத்தில் தொடங்கிய இவரது சினிமா பிரவேசத்தில் பல படங்களை இயக்கி கடைசியாக பொய் என்ற படத்துடன் நிறைவடைந்தது. தமிழ் மற்றும் ஹிந்தியில் படங்களை இயக்கியுள்ளார். ஹிந்தியில் இவர் இயக்கிய ஏக் துஜே கேலியே மிகப்பெரிய வெற்றியும், சாதனையும் படைத்தது.

பாலசந்தரின் மகனான காலம்சென்ற பால கைலாசம் அவர்களின் கம்பெனியான மின் பிம்பங்களின் தயாரிப்புகளாக வெளிவந்த கையளவு மனசு, ரயில் ஸ்நேகம் போன்ற சின்னத்திரை தொடர்கள் பெண்களை கிட்டத்தட்ட சீரியல் பைத்தியமாக்கின. அவ்வளவு தரமாக தொலைக்காட்சித்தொடரையும் இயக்கினார்.

அவர் இயக்கிய படங்களில் அதிகம் பேசப்பட்டவை கீழே....

எதிர் நீச்சல்

சிந்து பைரவி

அபூர்வ ராகங்கள்

வறுமையின் நிறம் சிவப்பு

தில்லு முல்லு

ஏக் துஜே கேலியே

உன்னால் முடியும் தம்பி

சர்வர் சுந்தரம் கதை மற்றும் வசனத்திற்காக.

இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும், கமலஹாசனையும் அறிமுகம் செய்தவரும் இவரே. சரிதா போன்ற நல்ல நடிகைகளுக்கு தொடர்ந்து வாய்ப்புக்கொடுத்து அவர்களின் திறமையை முழுமையாக பயன்படுத்தியவர்.

ஜனரஞ்சக படங்கள் எடுத்தாலும் யாரும் பேசத்தயங்கும் சமூக சிக்கல்களையும், சமூக சீர்திருத்த கருத்துகளையும் தனது படங்களின் களன்களாக வைத்தவர்.

தமிழ் திரையுலக வரலாற்றில் இவரின் பங்கு அசாதாரனமானது. பல நல்ல இயக்குணர்கள் உருவாக காரனமாக அமைந்தவர். மக்களின் சினிமா ரசனையை மாற்றியமைத்தவர்களில் ஒருவர். எளிமையும், எளிதில் அனுக முடிந்தவராக இருந்ததும் சினிமா உலகில் எல்லோருக்கும் நல்லவனாக, பிரியமானவராக இருக்க முடிந்திருக்கிறது.

இன்றைய வளரும் சினிமாக்கலைஞர்களுக்கு உற்சாகப்படுத்தி, ஊக்குவித்த ஒருகை குறைந்திருக்கிறது. இவரது மறைவு சினிமா உலகிற்கு நிச்சயம் மிகப்பெரிய இழப்பு.

எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து படமெடுத்த, சக சினிமா குடும்பத்தினரை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த, மாற்றுச்சிந்தனைகளுடன், சமூகப்பிரச்சினையை அலசும் திறனும் கொண்ட இவரை பின்பற்றி இன்னும் பலர் வருவதே இவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

- இட்லிவடை குழு

Read More...